ஆடிப்பெருக்கை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரையில் பெண்கள் சிறப்பு பூஜை

குறுக்கத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு ஏராளமான பெண்கள் சிறப்பு பூஜை செய்து மஞ்சள்கயிறு கட்டினர்

Update: 2022-08-03 06:15 GMT

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணி நதிக்கு பெண்கள் 18 வகை சாதம் படைத்தும், கும்மி பாட்டு பாடியும் பூஜை செய்து வழிபட்டனர்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணி நதிக்கு பெண்கள் 18 வகை சாதம் படைத்தும், கும்மி பாட்டு பாடியும் பூஜை செய்து வழிபட்டனர்.ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி 18ம் தேதி ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கினைப் பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர்.

தென்மேற்கு பருவ காலத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிளில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இந்த காலக்கட்டத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்காக வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.

அதேபோல் ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் நதிக்கரைக்கு சென்று பூஜை செய்து வணங்குவார்கள். அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு நெல்லையில் தாமிரபரணி நதிக் கரையோரம், படித்துறைகளில், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூஜைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக வணங்கினர். பூஜைக்காக மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று ஆற்று கரையில் படைத்து பண்டிகையாகக் கொண்டாடினர்.

நெல்லை சந்திப்பு குறுக்கத்துறை தாமிரபரணி ஆற்றில் பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தாமிரபரணி ஆற்றிற்கு 18 வகையான சாதங்களை படையில் இட்டு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றிற்கு தீபாரனை காட்டி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். மேலும் கும்மி பாட்டு பாடியும், நதிக்கரையில் மண் எடுத்து அதில் சாமி உருவம் பிடித்தும் உற்சாகமுடன் பெண்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

Tags:    

Similar News