தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்-ஆணையர் தகவல்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தவிர்க்கப்பட்டு ஆறு சுத்தமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-16 01:13 GMT

தாமிரபரணி ஆறு

திருநெல்வேலி மாநகராட்சியில் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் பொருட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்புகள்(DEWATSTechnology Structure) தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தச்சநல்லூர் மண்டலப் பகுதிக்குட்பட்ட சிந்துபூந்துறை, உடையார்பட்டி, செல்விநகர், சந்திப்பு பகுதி போன்ற பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 18 இலட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.


மேற்படி பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதினை தவிர்க்கும் விதமாக, தற்போது முதற்கட்டமாக வார்டு எண்.5 சிந்துபூந்துறை பகுதியில் ஆற்றின் கரை ஓரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு வடிகட்டி அமைப்பு (DEWATS Technology Structure) அமைக்கும் பணிகள் முடிவுற்று சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரினை 1.50 மீட்டர் விட்டமுள்ள நீர்த் தேக்கத் தொட்டிகள் இரண்டு எண்ணம் அமைத்து அதில் சேகரிக்கப்பட்டு பின்னர், மின்மோட்டார்கள் மூலம் அருகில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் உடையார்பட்டி சாலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை குழாயுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

மேற்படி பணியானது தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேற்படி பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் போது, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து நாள் ஒன்றுக்கு 18 இலட்சம் லிட்டர் கழிவுநீர் தாமிரபரணி ஆற்றில் கலப்பது தவிர்க்கப்பட்டு ஆறு சுத்தமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News