நெல்லை: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் நினைவு நாளை அனுசரிக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதிப்பு

ஜூலை 23 ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பாக பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்

Update: 2021-07-19 16:34 GMT

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நினைவுதினம் அனுசரிப்பதில் இந்த ஆண்டும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி, தங்களது கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்த போது, காவல்துறையினர் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். அப்போது பலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இறங்கி தப்பிக்க முயன்றனர். அப்போது 17 தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி  உயிரிழந்தனர்.

இதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 23-ஆம் தேதி உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இந்த சூழ்நிலையில், இந்த ஆண்டு வரும் 23-ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே, அஞ்சலி நிகழ்ச்சி தொடர்பாக மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ் குமார், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஒவ்வோர் அமைப்பிலும் 5 நபர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த வர வேண்டும்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்த வேண்டும். தாங்கள் ஒதுக்கிய நேரத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை துணை ஆணையர் தெரிவித்தார். காவல்துறையின் கட்டுப்பாடுகளை ஏற்று, வரும் 23-ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News