காவலர்கள் மீது கவனம் செலுத்தும் அதிகாரிகள்

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்குகளில் காவல்துறை தனது முழு பணியையும் செய்து வருகிறது.

Update: 2021-04-25 13:34 GMT

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்குகளில் காவல்துறை தனது முழு பணியையும் செய்து வருகிறது, நேற்று சென்னையில் மட்டும் 3 காவலர்கள் கொரானா தொற்று காரணமாக உயிரிழந்து இருப்பது காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஒரு முன்னுதாரண நிகழ்வாக நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர காவல்துறை சார்பாக களத்தில் அர்ப்பணிப்பாய் பணி புரியும் காவலர்கள் மீது உயரதிகாரிகள் கவனம் வைத்து, அவர்களுக்கு தேநீர், பழச்சாறு, பிஸ்கட்டுகள், பழங்கள், கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கி கவனமாக பணிபுரிய அறிவுறுத்தி இருப்பது காவலர்களுக்கு புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

முழு ஊரடங்கான இன்று நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் சோதனை சாவடியில் ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS, சோதனை சாவடியில் பணி புரிந்த காவலர்கள் அனைவருக்கும், தன்னுடன் வந்த அதிரடிப்படை காவலர்களுக்கும் தேநீர், பழங்கள், பிஸ்கட்டுகள், கப சுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கி பாதுகாப்புடன் பணி செய்ய அறிவுறுத்தினார். அதே நேரத்தில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் நெல்லை மாநகரில் கடும் வெயிலில் பணிபுரிந்த காவலர்களுக்கு பழச்சாறு கொடுத்து பாதுகாப்புடன் பணியாற்றுங்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவை கொண்டு சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு உங்களது ஒத்துழைப்பை நல்குங்கள் என உற்சாகப்படுத்தினார்.

முழு நேர ஊரடங்கின் போதும் காவலர்களுக்கு தேவையான குடிநீர், உணவு விஷயங்களில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்துவது கீழ் நிலை காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரானா தடுப்பு பணிகளில் காவலர்களை மனித நேயத்துடன் கையாளுவதில் மற்ற மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக நெல்லை மாவட்ட, மாநகர காவல்துறையினர் செயல்பட்டு வருவதை காவலர்கள் உட்பட பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News