நெல்லையில் 17 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி

நெல்லையில் நீட் தேர்வு எழுதுவதற்கு வந்த மாணவ- மாணவிகள் கட்டுப்பாடுகளுடன்,வெப்பப் பரிசோதனைக்கு பின்பு தேர்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Update: 2021-09-12 07:00 GMT

நெல்லையில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில், சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் மாணவர்கள். 

நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 17 தேர்வு மையங்களில் 6996 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள 17 தேர்வு மையங்களிலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 12 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக காலை 10 மணிக்கெல்லாம் மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் தேர்வு மையத்துக்கு வரத் தொடங்கினர். வழக்கம்போல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும், நகைகள் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது.

எனவே தீவிர பரிசோதனைக்கு பிறகு உரிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 50 மில்லி சானிடைசர் மற்றும் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துச் செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக தேர்வு மையத்தின் வாசலில் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகக்கவசமும் வழங்கப்பட்டது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க நெல்லை மாவட்டத்தில் உள்ள 17 மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாவட்டமான தென்காசியில், மொத்தம் மூன்று மையங்களில் நீட் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News