நெல்லை: இந்து தேசிய கட்சி பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டம்

பொதுமக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் நெல்லையில் இந்து தேசிய கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2022-01-24 10:14 GMT

நெல்லையில் இந்து தேசிய கட்சியினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி நூதன போராட்டம் நடத்தினர்.

தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நகை கடன் ரத்து, கல்விக் கடன் ரத்து, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் உள்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியதாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாகவும் இந்து தேசிய கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பொதுமக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் இந்து தேசிய கட்சியினர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி அக்கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.எஸ்.மணி தலைமையில் நிர்வாகிகள் கையில் அல்வா உடன் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கு அல்வாவை வழங்கி தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக கோஷம் எழுப்பினர். வாக்குறுதிகள் என்ற பெயரில் ஆசைவார்த்தை கூறி அவற்றை உடனடியாக நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் செயலை உணர்த்தும் வகையில் நூதனமாக மக்களுக்கு அல்வா வழங்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

Similar News