நெல்லையில் அமைக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

நெல்லையில் அமைக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்.

Update: 2023-11-22 10:22 GMT

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சாலையை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

நெல்லை மாநகராட்சி ஆணையராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் சமீபத்தில் பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். மாநகரத்தில் அ.தி.மு.க .மற்றும் தி.மு.க. இடையே ஏற்படும் கோஷ்டி பூசல்கள்  காரணமாக பல்வேறு சர்ச்சைகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்த சூழலில்  நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கும் விதமாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் பெரும்பாலான தெருக்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைகள் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடப்பதாக மாநகராட்சி ஆணையாளருக்கு  புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து ஆணையாளர்  அவ்வப்போது மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News