நெல்லையில் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை

நெல்லையில் மாஸ்க் அணியாமல் வரும், வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-01-21 11:36 GMT

நெல்லையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டி சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.


தமிழ்நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், நெல்லை மாவட்டத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக நேற்று ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 792 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் டவுன் காவல் நிலைய போலீசார்  டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து அவர்களை கொரோனா பரிசோனை செய்ய வைத்தனர். இதற்காக நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தனர். மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இனிமேல் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்று போலீசார் அவர்களிடம் அறிவுறுத்தினார். அதேபோல் கே.டி.சி. நகரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும் போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டு மாஸ்க் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். கொரோனா 3ம் அலையை கட்டுப்படுத்த ஒருபுறம் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மறுபுறம் போலீசார் மாஸ்க் அணியாத பொதுமக்களை கண்காணித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது மற்றும் இதுபோன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்வது ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News