வரும் 13 ஆம் தேதி நெல் திருவிழா அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயன்பெற அழைப்பு

வண்ணாரப்பேட்டை நூற்றாண்டு மண்டபத்தில் வரும் 13 ஆம் தேதி நெல் திருவிழா நடைபெறுவதாக ஆட்சியர் வே.விஷ்ணு தகவல்

Update: 2022-05-10 15:45 GMT

பைல் படம்

நெல்லையில் வரும் 13 ஆம் தேதி  நடைபெறவுள்ள நெல் திருவிழாவில் அனைத்து விவசாய பெருமக்களும் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு  வெளியிட்ட தகவல்: திருநெல்வேலி மாவட்டம் அதன் பெயருக்கு ஏற்றார்போல் அதிகமாக நெல் பயிரிடும் மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 80 சதவீதம் நெல் மட்டுமே பயிரிடப்படுகிறது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி, பாபநாசம், மணிமுத்தாறு, அணைகளில் நீரை பயன்படுத்தி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு முதன் முறையாக நெல் திருவிழா 13.05.2022 அன்று பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில்  தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணைமேயர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயப் பெருமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாய பெருமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நடத்தும் இத்திருவிழாவில் அனைத்து விவசாய பெருமக்களும் திரளாய் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். நெல் விதை துவங்கி அது அறுவடையாகி தானியமாகும் வரை உள்ள அனைத்து தொழில் நுட்பங்களும் இயற்கை முறையில் சாகுபடி செய்வதன் நன்மைகள் குறித்து கருத்துக்காட்சிகளும், விரிவான விளக்கங்களும் தரப்பட இருக்கிறது.

மண்பரிசோதனை, தரமான நெல்விதைகள் உற்பத்தி, பூச்சி, நோய் தாக்குதல் தவிர்க்க முறையான விதை நேர்த்தி, பாய்நாற்றங்கால், நேரடி நெல் விதைப்பு, ஒருங்கிணைந்த உரநிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம், களை நிர்வாகம், நீர் மேலாண்மை மற்றும் அறுவடை வரையிலான அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்க வல்லுநர்கள் வருகை தர இருக்கிறார்கள். நுண்ணீர் பாசன முறைகளான சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனங்களை பயன்படுத்தி நெல் வளர்க்கும் முறை பற்றிய காட்சியும் இடம் பெறுகிறது. வேளாண் பொறியியல் துறை மூலமாக நெல் சாகுபடிக்கு பயன்படும் இயந்திர தொகுப்புகளின் கண்காட்சியும் இடம் பெற இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் நெல் சாகுபடியில் சிறந்த விளங்கும் முன்னோடி விவசாயிகளின் அனுபவங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி தோட்டக்கலை மற்றும் சகோதரத்துறைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கும் இப்பெருவிழாவில் அனைத்து விவசாய பெருமக்களும் திரளாகக் கலந்து கொண்டு  பயன்பெறலாம்.

Tags:    

Similar News