பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Update: 2020-12-23 05:28 GMT

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு என்பது பல்வேறுபட்ட உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வணிக நிறுவனங்களைப் பற்றிய கணக்கெடுப்பாகும். இக்கணக்கெடுப்புப் பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, செல்போன் எண், செய்யும் தொழில், சுயதொழில் முதலீடுகள் மற்றும் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை, பான் எண் மற்றும் ஜி.எஸ்.டி எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

இக்கணக்கெடுப்பு விவரங்கள் முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடுதலுக்கு பயன்படுத்தப்படவுள்ளன. எனவே கணக்கெடுப்பிற்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் தேவையான புள்ளி விவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Tags: