குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு

குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்டோர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-05-23 13:11 GMT

குற்றாலத்தில் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன உயிரின அலுவலர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடுத்த படம்.

குற்றால அருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து அருவியிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் கடந்த 17ஆம் தேதி அன்று நெல்லையை சேர்ந்த சிறுவன் வெள்ளத்தில் சிக்கி சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து குற்றால அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 7வது நாளாக தடையானது நீடித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன அலுவலர் முருகன் உள்ளிட்டோர் நேரடியாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். மெயின் அருவியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட நிலையில் வெள்ளத்தின் போது எழுப்பக்கூடிய அபாய ஒலிகளை ஒலிக்க செய்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் பெண்கள் உடை மாற்றும் அறை, தரைத்தளம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து உடனடியாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்,

அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அது குறித்தான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அனைத்து அருவிகளிலும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும், அருவியின் மேல் பகுதியில் வெள்ளத்தை கண்காணிக்க வனத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் மெயின் அருவியில் பெண்கள் உடை மாற்றும் அறை,தரைத்தளம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மெயின் அருகில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஓரிரு நாட்களில் அனுமதிக்கப்படும்.

பழைய குற்றால அருவியில் வெள்ளத்தின் போது சுற்றுலா பயணிகளை அடித்து செல்லாதவாறு பாதுகாப்பு கம்பிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பழைய குற்றால அருவியை பொருத்தவரை சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காலை 6 மணி முதல் மாலை 5.30மணி வரை குளிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் வெள்ளத்தை முன்கூட்டியே கணிக்க கூடிய early warning system குறித்த ஆய்வுகள் நடைபெற்று அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். மேலும் விபத்துகள் ஏற்பட்டால் உடனடியாக முதல் உதவி செய்யும் வகையில் அனைத்து கருவிகளிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Similar News