பழைய குற்றால அருவியில் குளிக்க மீண்டும் தடை!

பழைய குற்றால அருவியில் 3 மணி நேரம் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-24 07:16 GMT

பழைய குற்றாலம் அருவி.

பழைய குற்றால அருவியில் மூன்று மணி நேரம் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றால அருவி பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நெல்லையைச் சேர்ந்த 17 வயது மாணவன் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விரைவில் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். 

இதனைத் தொடர்ந்து நேற்று குற்றால அருவி பகுதிகளில் உள்ள தரை தளங்கள் ஆகியவற்றை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று பெண்கள் உடை மாற்றும் வரை சேதம் அடைந்திருந்ததால் அதனை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. . இதனை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வன உயிரின அலுவலர் முருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை புலி அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் குற்றாலத்தில் குளிக்க பல்வேறு வழிமுறை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டது.

அதில் பழைய குற்றால அருவியில் மட்டும் காலை 6:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் இன்று காலை 6 மணிக்கு பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வந்ததால் மலைப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் நீர்வரத்து அதிகரிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர், மற்றும் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து பழைய குற்றாலத்தில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது. புலி அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News