குற்றாலத்தில் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 3 இளைஞர்கள் காயம்

குற்றாலத்தில் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 3 இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-11 10:48 GMT

விபத்தை ஏற்படுத்திய லாரி.

குற்றாலத்தில் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 3 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வரும் சூழலில், இந்த வாகனங்களால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, சுற்றுலாத்தலங்கள் அதிகம் உள்ள பகுதி வழியாக இந்த கனரக வாகனங்கள் செல்வதால் அவ்வப்போது வாகன நெரிசல்களும் இந்த வாகனங்களால் ஏற்பட்டு வருகிறது.

பொதுவாக, கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில், அதனை எதுவும் கண்டு கொள்ளாமல் தமிழக அரசு தொடர்ந்து கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து வருகிறது.

அந்த வகையில்  கனிம வள கடத்தலை கண்டித்து செங்கோட்டை பகுதியில் போராட்டம் நடைபெற உள்ள சூழலில், தற்போது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, கடையம் பகுதியில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று குற்றாலம் வழியாக வந்து கொண்டிருந்துள்ளது. அப்பொழுது, தென்காசி அருகே உள்ள நன்னாகரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரியானது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மூன்று இளைஞர்களுக்கும் படுகாயம் அடைந்த சூழலில், அருகே இருந்தவர்கள் மூன்று இளைஞர்களையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து தற்போது இரண்டு இளைஞர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், படுகாயம் அடைந்த இளைஞர்கள் நன்னாகரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், சுபிஷ், பிரித்தம் என்பதும், இவர்கள் மூன்று பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநரான செங்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனிமவள கடத்தலை கண்டித்து தென்காசி மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படும் சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News