அரசு பள்ளி தொடங்கக் கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி..!

அரசு பள்ளி தொடங்கக் கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் கீழ்குத்த பாஞ்சான் கிராம மக்களில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-06-13 14:31 GMT

கீழ்குத்தபாஞ்சான் கிராம மக்கள், அரசு பள்ளி தொடங்க கோரி ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்ற காட்சி. 

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கீழகுத்தபாஞ்சான் கிராமத்தில் அரசு பள்ளி துவங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பள்ளி மாணவ மாணவியர் ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த குவிந்தனர்.

கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கள் கிழமை) பள்ளி திறக்கும் நிலையில் மாணவ, மாணவியர் பள்ளியை புறக்கணித்து ஆலங்குளம் வட்டார கல்வி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தினரிடம் சங்கரன்கோவில் (கல்வி மாவட்டம்) மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தில் கலந்து கொண்ட பாலமுருகன் (33) என்பவர் பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயன்றார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதால் பரபரப்பு நிலவியது

போராட்டம் குறித்து மாணவ, மாணவியர், பெற்றோர்கள் கூறியதாவது: கீழகுத்தபாஞ்சான் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆதிதிராவிடர் அதிகம் வசிக்கும் இந்த ஊரில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளி கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆதிதிராவிடத்துறை சார்பில் சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனால், அரசு பள்ளி கேட்டு மீண்டும் மாற்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த கிராமத்தில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளி கிறிஸ்தவ பள்ளியாக இருக்கிறது.இந்த சூழலில், அரசு பள்ளிக்கு இங்கிருந்து 1 முதல் 5 ம் வகுப்பு படிக்கும் சுமார் 240 மாணவ , மாணவியர் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாழையூத்து, புதுப்பட்டி, மாதாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு கல்வி பயிலச் செல்கின்றனர்.

போதிய பேருந்துகள் வசதி மற்றும் போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட வேண்டியுள்ளது. இதனையடுத்து கீழகுத்த பாஞ்சானில் அரசு பள்ளி வேண்டும் என கடந்த 2015 ம் ஆண்டு முதல் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை மனு அளித்தும் பலனில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

.

Tags:    

Similar News