சிவகங்கை: தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து வைப்பு

சிவகங்கை மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 2,90,58,571 வரை பயனாளிகளுக்கு கிடைத்தது.

Update: 2021-09-12 08:45 GMT

சிவகங்கையில் நேற்று நடந்த  மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 271 வழக்குகள் முடித்து தீர்வு காணப்பட்டன.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும் சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Pre-litigation) வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் நீதிபதி கருணாநிதி, கூடுதல் மாவட்ட நீதிபதி. சத்தியதாரா, குடும்ப நல நீதிபதி முத்துகுமரன், கூடுதல் விரைவு மாவட்ட நீதிபதி சரத்ராஜ், போக்ஸோ மாவட்ட நீதிபதி பாபுலால், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், செயலாளர்/சார்பு நீதிபதி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு பரமேஸ்வரி, சார்பு நீதிபதி சுந்தரராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி பாரத தேவி மற்றும் வழக்கறிஞர்கள் முத்துராமன், ராமலிங்கம், நாகேஸ்வரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற்றனர்.

தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 66 குற்றவியல் வழக்குகளும், 56 காசோலை மோசடி வழக்குகளும், 67 வங்கிக் கடன் வழக்குகளும், 100 மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகளும், 23 குடும்பப் பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளும் மற்றும் 373 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் என மொத்தம் 685 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 258 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு 2,80,15,571/வரையில் வழக்காடிகளுக்கு கிடைக்குமாறு முடிக்கப்பட்டது.

வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத (Prelitigation) வழக்குகளில் 13 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 13 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.10,43,000/- வரையில் வங்கிகளுக்கு தீர்வானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு முதுநிலை நிர்வாக உதவியாளர்கள், இளநிலை நிர்வாக உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News