காற்றில் விழுந்த மின்கம்பம்: லஞ்சம் கேட்டு அலைக்கழிப்பதாக புகார்

சிவகங்கையில், காற்றில் விழுந்த மின் கம்பத்தை சரிசெய்ய லஞ்சம் கேட்டு 10 நாட்களாக அலைக்கழிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2021-10-03 05:15 GMT

ஒக்கூரை அடுத்துள்ள ஓ.அண்ணநகர் கிராமத்தில் விழுந்து முறிந்த விவசாய மின் இணைப்புக்கான கம்பம். 

சிவகங்கை மாவட்டம், ஒக்கூரை அடுத்துள்ள ஓ.அண்ணநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துராமன். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில்,  விவசாயம் செய்துவருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பெய்த காற்றுடன் கூடிய கனமழையால், இவரது விவசாய நிலத்தில் மிக மோசமான நிலையில் காணப்பட்ட இரு மின்கம்பங்களில் ஒன்று முறிந்து உடைந்து விழுந்துள்ளது.

இது குறித்து, மதகுபட்டி மின்சார வாரிய சார்பு நிலையத்திற்கு, முத்துராமன் தகவல் தெரிவித்ததுடன், சேதமான மின் கம்பங்களை மாற்றி தரக்கோரியும் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அப்பகுதியில் மின் இணைப்பை உடனடியாக துண்டித்த ஊழியர்கள் , கடந்த பத்து நாட்களாக மின் கம்பங்களை மாற்றி தராமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுபற்றி விவரம் கேட்ட விவசாயியிடம்,  மின்கம்பத்தை மாற்ற அதிகாரிக்கு 4 ஆயிரம் ரூபாய் உட்பட மொத்த 10 ஆயிரம் ரூபாய் செலவாகும் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படும் உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாமதிக்காமல், சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றித்தர வேண்டும் என்று, விவசாயி  முத்துராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News