வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பஸ் வசதி செய்து தர கோரிக்கை

Update: 2021-04-04 04:30 GMT

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஜாக்டோ ஜியோ வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துப்பாண்டியன் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மதுசூதன் ரெட்டிக்கு மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 100 சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தபால் வாக்கு கிடைக்கப்பெறாத ஆசிரியர்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து வாக்குச்சீட்டு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் வாக்கு பயிற்சி மையங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கு உரிய பஸ் வசதிகளை செய்து தர வேண்டும். குறிப்பாக மானாமதுரை, எஸ்.புதூர், இளையான்குடி ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் இக்காலத்தில் தேர்தல் பயிற்சி நடக்கும் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடிக்கு வருவதில் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே ஏப்ரல் 5 ம் தேதி சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாக்கு பதிவு மையங்களுக்கு செல்வதற்கும், வாக்கு பதிவு முடிந்து நள்ளிரவு வீடு திரும்புவதற்கும் ஒவ்வொரு தேர்தல்களிலும் பேருந்து வசதி கிடைக்காமல் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மண்டல அலுவலர்கள் மூலம் உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

கிராமப்புற வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருவாய் துறையின் மூலம் உணவு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கொரோனா நோய் தொற்றாளர்களிடம் இருந்து வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்களை தற்காத்து கொள்ள உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வருகிற தேர்தலில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தலை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் நேர்மையாக நடத்துவதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News