சிவகங்கை: ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஒப்பந்ததாரரிடம் அதிக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை அடுத்து ஊழல் தடுப்பு, கண்கா ணிப்புப்பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு

Update: 2021-09-30 10:20 GMT

சிவகங்கையிலுள்ள ஊரக வளர்ச்சித்திட்ட அலுவலகத்தில் ஆய்வு நடத்த சென்ற  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப்பிரிவு போலீஸார்.

ஒப்பந்ததாரரிடம் அதிக லஞ்சம் கேட்பதாக வந்த புகாரின் பேரில்   சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை , ஊராட்சி துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம வளர்ச்சிக்கு தேவையான அனைத்து பணிகளுக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு, திட்ட அலுவலரின் ஒப்புதலுடன் ஒப்பந்தகாரர்களின் மூலம் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முக்கியமான துறைகளில் ஒன்றான இந்த ஊரக வளர்ச்சி துறையில், மாவட்ட திட்ட அலுவலராக பணியில் இருந்த வடிவேல் என்பவர் பணியிடமாறுதலில்  சென்று விட்டார். இதனால்,  கடந்த 6 மாதமாக திட்ட அலுவலர் பணி காலியாக உள்ள நிலையில், தற்காலிகமாக பொறியாளரின் பொறுப்பில்  ஊரக வளர்ச்சி துறை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஒப்பந்ததாரர்களிடம்  அதிக லஞ்சம்  பெறப்படுவதாக, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி  மணிமன்னன், ஆய்வாளர் சந்திரன் உட்பட 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இடையூறு ஏற்படாதவாறு தடுக்க சுமார் 10 ஆயுதப்படை போலீசார் வரவழைக்கப்பட்டு, அலுவலக வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Tags:    

Similar News