அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு மருத்துவ மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இருதயராஜ், ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகியோர் தங்களுடைய தோட்டத்தில் மது அருந்திய 7 பேரை கண்டித்தபோது தாக்கப்பட்டனர்.

Update: 2021-07-31 13:03 GMT

சிவகங்கையில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட மருத்துவக் கல்லூரி மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே முத்து நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் இருதயராஜ். இவரது மகன்களான ஜோசப் சேவியர் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் பிலிப்பைன் நாட்டில் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று காரணமாக, சொந்த ஊரிலேயே தங்கி ஆன்லைன் மூலம் படித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்குச் சொந்தமான அண்ணாமலை நகர் தோட்டத்தில் 7 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதனை தந்தை இருதயராஜ் மற்றும் மகன்கள் ஜோசப் சேவியர், கிறிஸ்டோபர் ஆகிய மூவரும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தக்கும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தியால் மூன்று பேரையும் குத்தினர். இதில், கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த மற்ற இருவரும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். தப்பிபோடிய கும்பலை பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், உத்தரவின் பேரில், அமைக்கப்பட்ட 4 தனிப்படைகள்  இதுவரை 5 பேரை கைது செய்துள்ள நிலையில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஸ்டோபரின் அண்ணன் ஜோசப் சேவியரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் இரு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News