அமைச்சர் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி

Update: 2021-03-11 07:45 GMT

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் கதர்துறை அமைச்சருக்கு மீண்டும் வாய்ப்பளிக்காததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதுடன் சிலர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஸ்கரன். இவர் பின்னர் கதர்துறை மற்றும் கிராம தொழில் துறை அமைச்சராகவும் கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலானது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் சிவகங்கை தொகுதியில் அமைச்சர் பாஸ்கரனின் பெயர் இடம் பெறாமல் மாறாக அதிமுக மாவட்ட செயலாளரான பி.ஆர்.செந்தில்நாதனின் பெயர் இடம் பெற்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் சிவகங்கை சிவன்கோவில் எதிரே சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு கைகளில் கருப்பு கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றதுடன் எம்ஜிஆர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த போராட்டத்தின் போது 3 பேர் திடீரென தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றதுடன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதனுக்கு பதிலாக தொகுதியில் உள்ள வேறு யாரை வேண்டுமானாலும் நிறுத்தட்டும் என போர்க்கொடி உயர்த்தியதுடன் அமைச்சருக்கு ஆதரவாகவும் மாவட்ட செயலாளருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News