மருத்துவமனை தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

Update: 2021-03-11 04:15 GMT

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதியம் வழங்காததை கண்டித்து திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சுகாதார பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 700 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மருத்துவமனை பகுதிகளை சுத்தம் செய்வது, வார்டுகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் தாமதமாக வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில் இந்த மாதத்திற்கான ஊதியம் இதுவரையிலும் வழங்கப்படவில்லை என கூறி இன்று காலை முதல் ஷிப்ட்டில் பணிபுரியும் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியை புறக்கணிப்பு செய்து வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மருத்துவமனை தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதியத்தை உடனே வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவதாக கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது, ஒரு சில காரணங்களாலேயே இந்த மாதம் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பதிலளித்தனர். ஊழியர்களின் இந்த போராட்டத்தினால் மருத்துவமனை சுகாதார பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விரைந்து தீர்வு காண மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும். 

Tags:    

Similar News