சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி..!

Update: 2024-06-21 10:30 GMT

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாமக்கல்லில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி துவக்கி வைத்தார். அருகில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் :

நாமக்கல்லில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 10ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று 21ம் தேதி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் யோகா இயற்கை மருத்துவ வாழ்வியல் பிரிவு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஸ்ரீ கோகுல்நாதா மிஷன் இயற்கை யோகா மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, சர்வதேச யோகா தின விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி மோகனூர் ரோடு, டாக்டர் சங்கரன்ரோடு, திருச்சி ரோடு, போலீஸ் நிலையம் வழியாகச் சென்று மீண்டும் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறைவடைந்தது.

யோகாசனங்கள் செய்வதன் அவசியம், அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் முழங்கியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன், மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் ராஜேஸ் கண்ணன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் குணசேகரன், கோகுல் நாதா மிஷன் இயக்குநர் மாதையன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி பேராசிரியர் வெஸ்லி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News