கிறிஸ்தவ தேவாலயங்கள் புதுப்பிக்க கூடுதல் மானிய உதவி : கலெக்டர்..!

கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிக்க, தமிழக அரசு சார்பில் கூடுதல் மானிய உதவி வழங்கப்படுகிறது.

Update: 2024-06-21 09:30 GMT

கோப்பு படம் 

கிறிஸ்தவ தேவாலயங்கள் புதுப்பிக்க கூடுதல் மானிய உதவி : கலெக்டர்

நாமக்கல் :

கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிக்க, தமிழக அரசு சார்பில் கூடுதல் மானிய உதவி வழங்கப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016- 2017 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரங்கள்: சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் மற்றும் பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்படுகிறது.

தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம்: கட்டி முடிக்கப்பட்டு, 10 முதல் 15 வயது வரையான கட்டிடங்களுக்கு மானிய உதவி ஏற்கனவே 2 லட்சமாக இருந்தது. தற்போது 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 ஆண்டுகள் வயதான தேவாலய கட்டிடங்களுக்கு 4 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் வயதான தேவாலய கட்டிடங்களுக்கு ரூ. 6 லட்சத்தில் இருந்து தற்போது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவிகோரி விண்ணப்பிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு, நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்து புனரமைத்துக் கொள்ள விரும்பினால், தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News