ரேஷன்கடை பணியாளர்களுக்கு நாமக்கல் கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அறிவுரை

ரேஷன் கடை பணியாளர்கள், பொதுமக்களின் புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என இணைப்பதிவாளர் அறிவுறுத்தினார்.

Update: 2024-06-30 09:20 GMT

ரேஷன் கடையில் பொருட்கள் வினியோகம் (கோப்பு படம்)

ரேஷன் கடை பணியாளர்கள், பொதுமக்களின் புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என இணைப்பதிவாளர் அறிவுறுத்தினார்.

நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், கொல்லிமலை ஆகிய தாலுகா பகுதிகளில், ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான, மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

அப்போது அவர்  பேசியதாவது:-

ரேஷன் கடைகள் மூலம், தமிழக அரசின் பொது விநியோகத் திட்டப் பொருட்களை நுகர்வோருக்கு சரியான முறையில் வழங்க வேண்டும். வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பொருட்களின் இருப்பை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிகாரிகள் ஆய்வின் போது அதற்கான பட்டியலைக் காண்பிக்க வேண்டும். கடைகளை சரியான நேரத்துக்கு திறக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும், பொதுமக்களின் புகார்களுக்கு இடமளிக்காமல் பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றி வரும் விற்பனையாளர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் நாகராஜன், நாமக்கல் சரக துணைப் பதிவாளர் ஜேசுதாஸ், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News