ஜவுளித்துறைக்கு நெருக்கடி: தீரன் தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்

ஜவுளித்துறையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என தீரன் தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-06-30 10:09 GMT

தீரன் தொழிற்சங்க பேரவைக் கூட்டத்தில், நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பேசினார். 

ஜவுளித்துறையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீரன் தொழிற்சங்க பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின், தொழிற்சங்க அமைப்பான, தீரன் தொழிற்சங்க பேரவை பொது உறுப்பினர் கூட்டம், இன்று  நாமக்கல் தீரன் சின்னமலை மாளிகையில் நடைபெற்றது. கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஏஐடியுசி மநில துணைத்தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் முன்னாள் எம்.பி. சின்ராஜ், தீரன் தொழிற்சங்க பேரவையின் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக கொங்கு கோமகன், பொருளாளராக மகேஸ்வரன், துணைத் தலைவர்களாக அய்யாசாமி, அழகேசன், துணை செயலாளர்களாக சாம்ராஜ்மூர்த்தி, விவேகானந்தன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கலாமணி, செந்தில்வேல், சண்முகம், சுரேஷ்குமர், அன்பழகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்யாமல் அப்படியே அமல்படுத்த வேண்டும். பொருளாதார மந்த நிலையால், தமிழகத்தில் விசைத்தறித் தொழில் கடுமையான நெருக்கடியில் உள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு ஜவுளித்துறையை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வந்த தூய்மைத் தொழிலாளர்களுக்கு மீண்டும் 4ம் நிலை அரசு பணியாளர் அந்தஸ்து வழங்கி அவர்களது குடும்பங்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகங்களில் சம்பள ஒப்பந்தம் ஏற்படுத்தி, உடனடியாக சம்பள உயர்வு வழங்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்களை, ஏற்கனவே இறந்துபோன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கி அவற்றை நிரப்ப வேண்டும்.

டாஸ்மாக் கடை பணியாளர்களை முழு நேர அரசு பணியாளர்களாக அறிவித்து சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். கடைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவித்த அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியை முழுமையாக வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவும், பெட்ரோல், டீசல், கேஸ் விலையை 50 சதவீதம் குறைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி, அரசு ஊழியர்களைப்போல் மின்வாரிய ஊழியர்களுக்கும் குடும்ப நல நிதி ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும். மின் விபத்தில் இறக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம் சிறப்பு நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதற்கான அரசு உத்தரவை வெளியிட வேண்டும். 1.12.2023 முதல் வழங்கவேண்டிய சம்பள உயர்வு பேச்சுவார்த்தைக்கான குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News