கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்; மத்திய இணை அமைச்சர் முருகன் ஆவேசம்

Namakkal news- கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்திற்கு, தமிழக அரசும், முதலமைச்சரும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.

Update: 2024-06-22 10:15 GMT

Namakkal news- நாமக்கல்லில் மத்திய இணை அமைச்சர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Namakkal news, Namakkal news today- கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்திற்கு, தமிழக அரசும், முதலமைச்சரும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, மத்திய செய்தி ஒளிபரப்பு மற்றும் பார்லி விவகாரத்துறை இணை அமைச்சர் முருகன் நாமக்கல் வந்தார். இரண்டவாது முறையாக மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நாமக்கல் வந்த அவருக்கு, நாமக்கல் நகர பாஜக தலைவர் சரவணன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நாமக்கல் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகப்பெரிய சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசும் தமிழக முதல்வரும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில், தேர்தலில் வெற்றிபெற்றால் தமிழகத்தில் உள் டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்போம் என கூறினார்கள். ஆனால் தற்போது மதுபானக்கடைகள் இரட்டிப்பாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் கள்ளச்சாராயம், கஞ்சா, போதை மருந்துகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது. இது திமுக அரசின் பயங்கரவாதம் என்றுதான் சொல்லவேண்டும்.

போலீஸ் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் அதை முறையாக பயன்படுத்தவில்லை. அரசின் கட்டுப்பாடு இல்லாததால் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி சென்று நிலவரத்தை நேரில் கண்டறிய வேண்டும். பெயரளவில் சாராயம் விற்பனை செய்ததாக 2 பேரை மட்டும் கைது செய்துவிட்டு வழக்கை முடிக்கக் கூடாது. எத்தனால் கலந்த சாரயாயம், விஷ சாராயம் என்றெல்லாம் கூறப்படுகிறது. இதை தயாரித்தவர் யார், அவர்களுக்கு எத்தனால் எப்படி வந்தது. இதற்கு மூல காரணம் யார் என்பதை தீவிர விசாரணை செய்து கண்டுபிடித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதற்காகத்தான், தமிழக பாஜக தலைவர் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.

தமிழக அரசின் மெத்தனப்போக்கால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதனால் இச்சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரிதான். தமிழகத்தில் குறைந்தது 1,000 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

மத்தியில் மோடி பிரதமராக பதவியேற்ற கடந்த 10 ஆண்டுளில், தமிழ்நாட்டிற்கு சுமார் 11 லட்சம் கோடி நிதி உதவி வழங்கப்பட்டு, ஏராளமான திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டாவது முறையாக மத்திய அமைச்சரவையில் பொறுப்பேற்றுள்ள நான், மேலும் பல திட்டங்களைக் தமிழகத்திற்கு கொண்டுவர பாடுபடுவேன். பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல, மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன்.

தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான அச்சு ஊடகங்கள், டிவிக்கள், டிஜிட்டில் மீடியாக்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் இயங்கி வருகின்றன. ஊடகத்துறையில் உள்ளவர்கள் தீர விசாரித்து உண்மை செய்திகளை மட்டுமே வெளியிடவேண்டும். அரைகுறையான, தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. இதுபோன்ற செய்திகளால் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொய்ச்செய்திகளை தவறாக சித்தரித்து வெளியிடும் ஊடகங்களின் மீது, புகார் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Tags:    

Similar News