கரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன் இளம்பெண் தர்ணா

Update: 2020-12-31 08:14 GMT

பணம், நகையை பறித்துக் கொண்டு கணவர் 2 வது திருமணம் செய்ததால் கோபமடைந்த அவரது முதல் மனைவி கரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் அருந்ததி. இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தபோது, கரூர் மாவட்டம் சுண்டுகுழிபட்டியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் அங்கு செல்போன் சர்வீஸ் கடை வைத்திருந்தார். அப்போது இருவரும் காதலித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு வினோத்குமார் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கோயம்புத்தூரில் அருந்ததியை திருமணம் செய்து கொண்டார். சுமார் ஆறு மாத காலம் அருந்ததியுடன் குடும்பம் நடத்திய வினோத்குமார் அருந்ததியிடம் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மற்றும் 3 சவரன் நகைகளை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவாகி விட்டாராம்.

இதையடுத்து அருந்ததி பல இடங்களில் தேடிய போது வினோத்குமார் தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் சுண்டுகுழிபட்டியில் தனது பெற்றோருடன் இருந்ததாகவும் அங்கு இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதையும் தெரிய வந்தது. இதையடுத்து அருந்ததி 2 வது திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றிய வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்னூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதையடுத்து இன்று அருந்ததி தனது திருமண புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களுடன் தனது தாயாருடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.,க்கு அந்த மனுவை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags: