டிக்டாக் லயா தர்மராஜ் குடும்பத்தினர் எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா

டிக்டாக் லயா தர்மராஜ் தனது குடும்பத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம்.

Update: 2021-08-04 13:48 GMT

திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்திய டிக்டாக் லயா தர்மராஜ் குடும்பத்தினர். 

திண்டுக்கல் அங்குவிலாஸ் ரோடு சின்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன்( வயது 31). இவருக்கும் திவ்யா (29) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் திவ்யாவின் கணவர் ராஜேஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக, மதுரைக்கு படிக்க சென்றார். அப்போது உடன் படித்த வடமதுரை அருகே உள்ள அய்யலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரின் மனைவி நாகராணி உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த திவ்யாவிற்கும், ராஜேஷ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது கணவர் ராஜேஸ்வரன் படிக்க சென்ற இடத்தில் வடமதுரை சேர்ந்த நாகராணி என்பவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த பிப்ரவரி மாதம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த ராஜேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகராணியுடன் சேர்ந்து வசித்து வருவதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த நாகராணியின் கணவர் ராஜேஷ் கண்ணன் தனது மனைவியை மீட்டு தர வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரனின் மனைவி திவ்யா அவரின் அக்கா சமூக ஆர்வலர் லயா தர்மராஜ் மற்றும் பெற்றோர் அளித்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையை கண்டித்து, தன்னை கொடுமைப்படுத்தி வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவரைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து ராஜேஸ்வன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தை விலக்கி கொண்டனர்.


Tags:    

Similar News