பள்ளி மாணவி மர்மச்சாவு: சிபிசிஐடி விசாரணையில் உடன்பாடு இல்லை: பாமக கருத்து

சிபிசிஐடிலும் உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸாரே உள்ளனர்.அவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக விசாரிக்க இயலாது

Update: 2021-12-23 15:00 GMT

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம்  பேசிய  பாமக   மாநில பொருளாளர் திலகபாமா. 

திண்டுக்கல் அருகே பாச்சலூர் பள்ளி மாணவி வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.சிபிசிஐடி  விசாரணையில் உடன்பாடு இல்லை எனவும், இப்பிரச்னை தொடர்பாக  பாமக நாளை போராட்டம் நடத்த உள்ளதாகவும்  அக்கட்சியின்  மாநில பொருளாளர் திலகபாமா தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலை கிராமம் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது 10 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடம் அருகே உடல் பாதி எரிந்த நிலையில் சிறுமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த மர்ம மரணம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி தலைமையில் தனிப்படையினர் பள்ளி ஆசிரியர்கள், சக பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர் உறவினர்கள் என அனைவரிடமும் விசாரித்தனர். ஆனாலும் இதுவரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே இன்று இந்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து திண்டுக்கலில்  பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: பாச்சலூர் பள்ளி மாணவி இறந்த வழக்கில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வருகிறது. சந்தேக மரணம் என்று வழக்குப் பதிந்த நிலையில், எதற்காக அவசர கதியில் மின்மயானத்தில் மாணவியின் உடல் எரியூட்டப்பட்டது.

மாணவியின் உடலை போலீசாரை வைத்து பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் எரியூட்டி உள்ளார். எதற்காக இவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை.அதே போல் அரசு பள்ளி என்பதால் நடந்த குற்றத்தை மறைக்கப் பார்க்கிறார்கள் என தெரிகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தபோதிலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. யாரையோ காப்பாற்றுவதற்காக வேண்டுமென்றே வழக்கினை திசை திருப்புவது போல் தெரிகிறது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இருப்பினும் இதில் எங்களுக்கு உடன்பாடில்லை.

சிபிசிஐடிலும் உள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸாரே  உள்ளனர். அவர்கள் அரசியல் அழுத்தம் காரணமாக முறையாக விசாரிக்க இயலாது. எனவே சிபிஐ விசாரணைக்கு வழக்கினை மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட என்னை பெண் என்று கூட பாராமல் திமுகவினர் அநாகரிகமான வார்த்தைகளால் பேசி அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர். இந்த ஒரு சம்பவமே இதற்கு சாட்சியாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவி உயிரிழந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார் அவர். இதில் மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார், ஜான் கென்னடி, மாவட்ட அமைப்பு செயலாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரவி, கோபால், மற்றும் எடி பால் ராயப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News