அனுமதியின்றி பாெது இடங்களில் விநாயகர் சிலைகள்: பாேலீசார் தீவிர கண்காணிப்பு

திண்டுக்கல்லில் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அருகில் உள்ள கோவில்களில் மாற்றி வைக்கப்பட்டது.

Update: 2021-09-10 08:34 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி பாெது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனிடையே அரசின் உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பொது இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய முயன்றனர். ஒரு சில இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடும் நடத்தப்பட்டது. அந்த சிலைகளை போலீசார் அறிவுறுத்தலின்படி அருகில் உள்ள கோவில்கள் மற்றும் சொந்த இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் ராஜக்காபட்டி முருகன் கோவில் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாஜக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலையை அருகிலுள்ள முருகன் கோவிலில் மாற்றி வைக்கப்பட்டது .

அதேபோல திண்டுக்கல், மேட்டுப்பட்டி, கோவிந்தாபுரம், ஆர்.வி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொது இடங்களில் இந்து அமைப்பினர்களால் வைக்கப்பட்ட சிலைகள் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் தனியார் சொந்தமான இடங்களில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் விநாயகர் சிலை ஊர்வலம் வழக்கம்போல நடத்துவதற்கு இந்து அமைப்புக்கள் திட்டமிட்டு உள்ளதால் போலீசார் அதிக அளவில் கண்காணிப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

Similar News