திண்டுக்கல்: சோப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் ரொக்கம், 41 சவரன் நகைகள் கொள்ளை

திண்டுக்கல் அருகே, சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில், ஜன்னல் கம்பிகளை அறுத்து ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 41 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-06-11 05:49 GMT

திண்டுக்கல் அருகேயுள்ள மாலைப்பட்டி காமாட்சிநகரை சேர்ந்தவர் சிவக்குமார், இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வி. கணவருக்கு உதவியாக சோப்பு கம்பெனிக்கு தினமும் சென்று வருவது வழக்கம்.

நேற்று காலை,  கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கம்பெனிக்கு சென்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு கம்பெனியில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்தனர். வீட்டு கதவு திறந்து பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வர்கள்,  பீரோவில் இருந்த பொருட்களை சரிபார்த்தனர். அப்போது,  ரூ.23 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 41 சவரன் தங்க நகைகள் காணமல் போயிருப்பது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், சுவர் ஏறி குதித்து வீட்டின் பின்பக்க ஜன்னல் கதவில் கம்பிகளை அறுத்து உள்ள புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரழைக்கப்பட்டு கதவு, பீரோவில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. திருடர்கள் அந்த வீட்டில் இருக்கும் ஒரு கண்காணிப்பு கேமராவை, வேறு திசையில் திருப்பி வைத்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News