திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Update: 2021-09-08 13:13 GMT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் நான்கு வழிச் சாலையாக உள்ள காரணத்தால் திண்டுக்கலிருந்து கரூர், சேலம், பெங்களூர் மற்றும் திருச்சி, கொடைக்கானல், சென்னை ஆகிய பகுதிகளை பிரிக்கும் முக்கிய சாலையாக உள்ளது.

இந்த சாலையில் காவல் துறையினர் பகல் நேரத்தில் யாரும் இருப்பது கிடையாது. தற்போது தொடர்ந்து முகூர்த்தகாலம், விடுமுறை நாட்கள் வருவதாலும், அதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் உள்ள நிலையில் இப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகன நெரிசல் ஏற்பட்டது. இதில் திண்டுக்கல் - திருச்சி சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. அதேபோல் கரூர் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரமும், மதுரை -பெங்களுர் சாலையில் 5 கிலோ மீட்டருக்கு மேலும் என நான்கு புறங்களும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதன் காரணமாக இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனமும் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சாலைகளில் ஆம்புலன்ஸ் ஒன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட நிலையில் வாகன நெரிசலில் இருந்து வேறு பாதை வழியாக அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் தொடர்ந்து வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களும் தற்போது செயல்பட்டுவரும் நிலையில் அரசு அதிகாரிகள் யாரும் இதனை கண்டுகொள்வது கிடையாது. அதேபோல் காவல்துறை அதிகாரிகளும் நெரிசலை கண்டுகொள்ளாததால் இன்று மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வெளியூர் பயணிகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆகவே உடனடியாக மாவட்ட காவல்துறை இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags:    

Similar News