கள்ளச்சந்தையில் விற்க கடத்தி வரப்பட்ட 454 லிட்டர் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்
சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, வெளி மாநில மது பாட்டில்கள்களை கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் சோதனை செய்து வரும் காவல் துறையினர், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சி.கோபாலபுரம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் 454 லிட்டர் வெளி மாநில மது பாட்டில்கள்களை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 454 லிட்டர் மதுவினை கொண்ட 822 பாட்டில்கள் வெளிமாநில மதுவை மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் மதுவினை கடத்தி வந்த செந்தில்குமார், விக்னேஷ்பிரபு, ஆனந்தகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.