கோவையில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் 191 பேருக்கு பணி நியமன ஆணை
புதிதாகப் பணி அமர்த்தப்பட்ட சுமார் 51,000 பணியாளர்களுக்கு பிரதமர் மோடி நியமன ஆணை வழங்கினார்.;
மத்திய, மாநில அரசு துறைகளில் புதிதாகப் பணி அமர்த்தப்பட்ட சுமார் 51,000 பணியாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்வு நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி வளாகத்தில் 'ரோஜ்கார் மேளா' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர், பங்கஜ் சவுத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில் பேசிய வானதி சீனவாசன், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்பு பெற்று உள்ளவர்கள், மக்கள் சேவையை முதன்மையாகவும் அதனையே பெருமையாகவும் கருத வேண்டும் எனவும், நாட்டின் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக சிறப்பான முறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், மேலும் அவர்களை சிறந்த தொழில் முனைவோர்களாக ஆக்கும் விதமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அதிக ஊக்கம் அளித்து வருவதாகவும், இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அஞ்சல் துறை, இரயில்வே துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை ஆகியவற்றில் புதிதாக பணியமர்த்தப்பட்ட 191 பேருக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.