ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு : சடலம் மீட்பு
புழல் ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி மாயமான நிலையில் இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.;
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன் (23). இவர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை பிரவீன் தமது பணியை முடித்துவிட்டு அருகில் உள்ள புழல் ஏரிக்கு குளிக்கச் சென்றுள்ளார் . நேற்றிரவு வெகு நேரமாகியும் பிரவீன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் புழல் ஏரியின் கரையில் அவரது துணிகள் மட்டும் இருப்பது தெரியவந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து செங்குன்றம் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று இரவு மாயமான பிரவீனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு பிரவீன் கிடைக்காததால் மீண்டும் இன்று காலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். அப்போது புழல் ஏரியில் மாயமான பிரவீன் சடலமாக மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர், சிறுமியர்கள் குளிப்பதற்காகச் சென்று நீரில் மூழ்குவது அடிக்கடி நடந்து வருகிறது. இதுகுறித்த விழிப்புணர்வை பள்ளி, கல்லூரிகளில் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் ஏற்பாடு செய்யவேண்டும்.இதன் மூலமாக பெற்றோரும் பிள்ளைகள் வெளியே செல்வதை கண்காணிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பெரிய ஏரி,குளம், குட்டைகள் உள்ள கிராமங்களில் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோலவே, செல்ஃபீ மோகத்தால் ரயில் முன் நின்று எடுப்பது, ஆபத்தான நீர்வீழ்ச்சிகளில் அல்லது பாறைகளில் எடுப்பது என்று அவர்களின் உயிரை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இதிலும் இளைஞர்கள், மாணவர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறி வருகின்றனர்.