சாலை விதிகளை பின்பற்றுங்கள்.. செங்குன்றத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு போலீஸார் அறிவுரை...

செங்குன்றத்தில் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலை விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து காவல் உதவி கமிஷனர் அறிவுரை வழங்கினார்.;

Update: 2023-01-04 05:00 GMT

செங்குன்றத்தில் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மலைச்சாமி அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் லாரி ஓட்டுநர்கள் பல்வேறு இடங்களில் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் செல்வதாக புகார்கள் எழுந்ததன. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் அடுத்த செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி காவல் மாவட்ட செங்குன்றம் சரக போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், போக்குவரத்து காவல் ஆணையர் மலைச்சாமி பேசியதாவது:

கடந்த இரு நாட்களுக்கு முன்பு செங்குன்றம் பகுதிகளில் சாலை விபத்தில் இறந்த‌ சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க லாரி உரிமையாளர் ஓட்டுநர்களை அழைத்து சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என முடிவு செய்தோம். லாரி ஓட்டுநர்கள் குடிபோதையில் வாகனங்களை இயக்க வேண்டாம். சந்திப்பு சாலைகளில் கனரக வாகனங்களை இயக்கும்போது நான்கு பக்கமும் கவனித்து நிதானத்துடன் ஓட்ட வேண்டும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் குழந்தைகள் சாலைகளை கடக்கும் போது மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். சாலைகளில் வாகனங்களை ஓரமாக நிறுத்தி போக்குவரத்து இடைஞ்சல் ஏற்படாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சூழ்நிலைகளால் விபத்து ஏற்படுகின்ற நிலைமைகளை மனதில் கொண்டு ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்தை காப்பாற்றவும், வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் உபயோகிக்க கூடாது என காவல் உதவி ஆணையர் மலைச்சாமி அறிவுரை வழங்கினார்.

பின்னர், லாரி ஓட்டுனர்களும் சாலை விதிகளை மதிப்போம் உயிரிழப்பை தடுப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இதில் செங்குன்றம் சுற்று வட்டார டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

Similar News