ஆந்திராவிற்கு கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
புழல் அருகே ஆந்திராவிற்கு லாரிகள் மூலம் கடத்த இருந்த 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்;
சென்னை புழல் அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசி இரண்டு லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்டது. ஒத்து தொடர்பாக ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புழல் சுற்றுப்பகுதிகளில் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் விலையில்லா ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புழலில் லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக 8 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதேபோல் செங்குன்றம் அருகே நடந்த சோதனையில் லாரி ஒன்றில் 3 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 11 டன் ரேஷன் அரிசியை, இரண்டு லாரிகளுடன் பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் அவற்றை கடத்த முயன்ற ஓட்டுநர்கள் ராஜேஷ், ராஜா ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான வசந்த், மாரியப்பன், நல்லாணி குமார் ஆகிய மூவரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.