செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விதியை மீறிய 40 பேர் மீது வழக்கு
செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விதியை மீறிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ரூ.1.39 லட்சம் அபராதம் விதித்தனர்.;
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன், பெத்திக்குப்பம் சோதனைச்சாவடி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, ரமேஷ், சரவணன், செல்வி, சீனிவாசன், குணசேகரன் குழுவினர் சென்னை&கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு விதிகளை மீறும் வாகனங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிவேகமாக செல்லும் வாகனங்கள் குறித்து துல்லியமாக அறிவதற்காக பிரத்யேக வாகன வேக அளவீட்டு கருவியை பயன்படுத்தி, அதிவேகம் செல்லும் வாகனங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை தாண்டி அதிவேகமாக இயக்கிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்பாடு, உரிய அனுமதி சான்று இல்லாத வாகனம், சீட் பெல்ட் அணியாமல் செல்வது, ஒளிர்விப்பு ஸ்டிக்கர் ஒட்டாதது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை மீறிய வாகனங்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டன. இந்த சோதனையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வேகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரம் அபராதத்திற்கு சலான் விநியோகித்து ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாலைகளில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்பு ஏற்படுவதன் காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி அதிவேகமாக செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவதாகவும், பள்ளி கல்லூரி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றி செல்லுதல், உரிய பாதுகாப்பு வசதி இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் சாலை விதிகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளமுருகன் எச்சரித்தார்.