பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் விழாவில் தீ மிதித்த பக்தர்கள்

பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2022-04-18 01:30 GMT

தீ மிதி விழாவில் பங்கேற்ற பக்தர்கள். 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் சித்திரா பௌர்ணமி தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.  தீமிதி திருவிழாவை தொடங்கி வைத்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, கொரோனா நோய் தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை பட்டிருந்த சித்திரை திருவிழா இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  கொரோனாவை ஒழித்து தேரோட்டங்கள், தெப்போற்சவங்கள், தீமிதி திருவிழாக்களை தங்கு தடையின்றி நடத்தி இறை அன்பர்களின் பசியை இந்த ஆட்சி போக்கியுள்ளதாக தெரிவித்தார்.

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 121 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்குமிடம், வாகன நிறுத்துமிடம், நேர்த்திக்கடன் செலுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்ட பணிகளை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாகவும்,  நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சிவன் கோவிலை தனியார் பள்ளி ஆக்கிரமித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில்களுக்கு சொந்தமான 852சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் தற்போது வரையில் 2600கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வாழ்வாதாரம் காரணமாக 40ஆண்டுகளுக்கு மேலாக கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை வாடகைதாரர்களாக வகைப்படுத்தவும், வணிக ரீதியில் ஆக்கிரமித்துள்ளவர்களிடம் இருந்து அவற்றை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்,  ஆலய அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன், இளங்கோ, ஞானம், வீரம்மாள், ஆலய திருப்பணி நிர்வாகிகள் புண்ணிய சேகரன், சன் முனியாண்டி, ஞானப்பன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News