நூதன முறையில் தொழிலாளியை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது..!
புழலில் நூதன முறையில் வடமாநில தொழிலாளியை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.;
கைது செய்யப்பட்டுள்ள கைருல்ஹாசன்
புழலில் வடமாநில தொழிலாளியை நூதன முறையில் ஏமாற்றி 46000ரூபாய் பணம் பறித்த வடமாநில நபர் கைது. மகன் விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் இருப்பதால் சிகிச்சைக்கு பணம் கேட்டு மோசடி.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமத் ( வயது 42) என்பவர் சென்னை புழலில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் யாதுல் (19) தந்தையுடன் தங்கி கட்டுமான வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கட்டிட வேலை குறைந்ததால் கடந்த 16ஆம் தேதி மேற்கு வங்கத்திற்கு செல்வதாக கூறி பேருந்தில் ஏறி யாதுல் புறப்பட்டுச் சென்றார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்ற யாதுலிடம் ஊருக்குச் செல்ல வேண்டாம், கட்டிட வேலை இருப்பதாக கூறி மேற்கு வங்கத்தை சேர்ந்த கைருல்ஹாசன் என்பவர் அருகில் உள்ள விடுதியில் தங்க வைத்துள்ளார். இது குறித்து யாதுல் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கைருல்ஹாசன், சமத்தை செல்போனில் தொடர்பு கொண்டு யாதுல் கட்டிட வேலை செய்த இடத்தில் தவறி விழுந்து காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்கு பணம் தேவை என கேட்டுள்ளார். கூகுள் பே மூலம் பணத்தை அனுப்புமாறு யாதும் தந்தையிடம் தந்தையிடம் கேட்டுள்ளார்.
மகனுக்கு மருத்துவ தேவை என கேட்டதால் அடுத்தடுத்து 10000, 20000, 10000, 2000, 4000 என மொத்தமாக 46000 ரூபாய் பணத்தை கூகுள் பே மூலம் சமத் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு பிறகு செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மறுநாள் யாதுல் தனது தந்தையை தொடர்பு கொண்டு தம்மை விடுதியில் தங்க வைத்து செல்போன், பர்ஸை திருடிக் கொண்டு ஏமாற்றி சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சமத் இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மோசடி உள்ளிட்ட 3பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த புழல் போலீசார் பணத்தை ஏமாற்றிய நபர் பேசிய செல்போன் எண் மூலம் செல்போன் சிக்னலை கொண்டு விசாரணை நடத்தினர்.
சென்னை திருவான்மியூரில் பதுங்கி இருந்த கைருல்ஹாஸனை கைது செய்தனர். விசாரணையில் ஐபிஎல் சூதாட்டத்தில் பணத்தை இழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கைருல்ஹாஸனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருப்பதாக கூறி நூதன முறையில் பணத்தை பறித்த வடமாநில நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.