சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்தவர்கள் கைது..!
சென்னை கோயம்பேட்டில் சரித்திர பதிவேடு குற்றவாளியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியை கத்தியால் தாக்கி கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் தாய்ஷா அடுக்குமாடி குடியிருப்பு அருகிலுள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறம் காலி மைதானம் உள்ளது. அதன் அருகே முள்ளுக்காடு உள்ளது. முள்ளுக்காட்டுப்பகுதியில் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் கை,கால் போன்ற பல இடங்களில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி மர்ம கும்பல் தப்பி உள்ளனர். இதனை அந்த வழியாகச் சென்ற ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான விசாரணையை தொடங்குவதற்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் முதற்கட்ட விசாரணையில் இறந்து போனவர் மதுரவாயல் பகுதியை சேர்ந்த முகமது ஆதாம், (வயது/23), த/பெ.ஷாஜகான், என அடையாளம் காணப்பட்டது.மேலும் கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் குறிப்பாக இறந்தவரின் நண்பர்களை தனித்தனியாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது இறந்தவரின் நண்பரான கோபால் என்பவருககும் கொலை செய்யப்பட்டவருக்கும் கடந்த ஒரு வாரம் முன்பு போதை மாத்திரையை விற்பனை செய்வதில் வாய் தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
முகமது ஆதாம் ,கோபாலை தாக்கியதும், இதனால் ஆத்திரமடைந்த கோபால் அவரது நண்பர்களுடன் சேர்ந்து முகமது ஆதாமை கத்தியால் வெட்டி கொலை செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில், மேற்படி கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 1.பாடி பகுதியை சேர்ந்த பாண்டு (எ) கமலேஷ், (வயது/23), த/பெ.சங்கர், 2.விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு, (வயது/23), த/பெ.மகேந்திரன், 3.கோயம்பேடு நெற்குன்றம் பகுதியை சேர்ந்த வெள்ளை செல்வா (எ) செல்வா, (வயது/23), த/பெ.சித்திரைவேல், 4.அதே பகுதியை சேர்ந்த ஜோயல் மோசஸ் இம்மானுவேல், (வயது/24), த/பெ.ஆரிஸ் ஜார்ஜ், என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேற்குறிப்பிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 கத்திகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட K-10 கோயம்பேடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி செல்வா (எ) வெள்ளை செல்வா மீது 1 கொலை உட்பட 8 குற்ற வழக்குகளும், பாண்டு (எ) கமலேஷ் மீது 1 கொலை வழக்கும், திருநாவுக்கரசு மீது 1 NDPS வழக்கும் உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நேற்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மீதி 2 முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.