16ஆம் நாள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தப்பிய ஓடிய கைதி கைது..!
செங்குன்றம் அருகே தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின் தப்பியோடிய கைதியை ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.;
செங்குன்றம் அருகே தந்தையின் 16ஆம் நாள் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் வந்து தப்பியோடிய கைதியை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.
மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் போதை பொருள் வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் குடியிருந்து வந்த இவரது தந்தை ஆறுமுகம் கடந்த மாதம் இறந்த நிலையில் 16ஆம் நாள் சடங்கில் பங்கேற்க அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தந்தையின் 16ஆம் நாள் இறுதி சடங்குகளில் பங்கேற்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மதுரை சிறையில் இருந்து கடந்த 1ம் தேதி உதவி ஆய்வாளர் தலைமையில் 7போலீஸ் பாதுகாப்புடன் தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இறுதி சடங்குகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் இருந்த போது பரமேஸ்வரன் தப்பித்து சென்றுவிட்டார்.
இது குறித்து மதுரை காவல்துறையினர் அளித்த புகாரின் பேரில் செங்குன்றம் போலீசார் தப்பியோடிய கைதியை தேடி வந்தனர். தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பதுங்கி இருந்த பரமேஸ்வரனை கைது செய்து செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.