ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் வீட்டில் நாட்டு குண்டு வீச்சு..!
சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்.
சோழவரம் அருகே திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீசிவிட்டு, தொழில் அதிபரின் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த 2 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு, லாரி ஓட்டுனரின் கையை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்ற ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருபவர் அபிஷா பிரியா வர்ஷினி இவரது கணவர் ஜெகன்.இவர் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவதோடு, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்,
இந்த நிலையில் இவரது வீட்டிற்குள் இரண்டு இரு சக்கர வாகனங்களில் முகக் கவசம் அணிந்து வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளது. அப்போது கணவன், மனைவி இருவரும் வீட்டில் இல்லாததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று அதே பகுதியில் உள்ள லாரிகள் நிறுத்தும் வளாகத்திற்குள்ளும், மற்றொரு நாட்டு வெடிகுண்டை வீசி உள்ளது.
அங்கிருந்த சிவா என்ற ஓட்டுனரின் கையை அரிவாளால் வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சிறுணியம் கிராமத்திற்கு சென்றனர். ஹாலோ பிளாக் கற்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்யும் தொழில் அதிபர்களான சரண்ராஜ் ( வயது 37), அவரது சகோதரர் சுந்தர்( வயது 34) ஆகியோர் வீட்டில் இருந்த போது அவர்களை குறி வைத்து, பட்டாக்கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த அதே கும்பல் வெளியே நிறுத்தி வைத்திருந்த 2 கார்கள், இரு சக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடி ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
பின்னர் வீட்டிற்குள் நுழைந்து சரண்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் வெட்ட முயன்ற போது சாதுரியமாக அவரது குடும்பத்தினர் வீட்டின் வாசல் கதவை இழுத்து பூட்டினர் அப்போது வெளியில் இருந்த அவர்களது தந்தை வெங்கடேசன் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சோழவரம் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து அடுத்தடுத்து மூன்று இடங்களில் வன்முறை செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்ற ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறை சம்பவங்களால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதோடு, அங்கு பதற்றம் நிலவி வருகிறது.