மூன்று மூலவர்களைக் கொண்ட நெல்லையப்பர் கோயில் வரலாறு பற்றி தெரிஞ்சுக்கோங்க

Nellaiappar Temple History in Tamil-தமிழ்நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாக விளங்குகிறது

Update: 2022-10-13 06:47 GMT

Nellaiappar Temple History in Tamil

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று.

இறைவர் திருப்பெயர் :நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் )

இறைவியார் திருப்பெயர் : காந்திமதி, வடிவுடையம்மை

தல மரம் : மூங்கில்

தீர்த்தம் : பொற்றாமரைக்குளம், சிந்துபூந்துறை

வழிபட்டோர் : மகாவிஷ்ணு,வேதபட்டர், நின்றசீர் நெடுமாறன்

தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர்,

தலவரலாறு

பல நூறு வருடங்களுக்கு முன்பு பால் வியாபாரம் செய்து கொண்டிருந்த ராமகோனார் என்பவர் அரண்மனைக்கு பால் கொண்டு போகும் வழியில் கல் ஒன்று அவரின் காலை தடுக்கியதால், கையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. தெரியாமல் தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் எதிர்பாராதது இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. தினந்தோறும் நடந்தால்?

இதனை பார்த்து பயந்த ராமகோனார் மன்னரிடம் உடனே இந்த விஷயத்தை கூறிவே, மன்னரும் தன் வீரர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, கல்லை அகற்ற கோடரியால் வெட்டினார். அந்த சமயம் அந்த கல்லிலிருந்து ரத்தம் கொப்பளித்து வந்தது.

அந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தபோது, ஒரு அசரீரி குரல் ஒலித்தது. அந்தக் கல்லின் அடியில் சுயம்புலிங்கம் இருப்பதாகவும், அந்த லிங்கத்தை மூவராக மூலவராக கோவிலில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அந்த குரல் ஒலித்தது. அந்த லிங்கத்தை கொண்டு மன்னர் நெல்லையப்பர் கோயிலை எழுப்பியதாக கூறுகிறது வரலாறு.

திருநெல்வேலி பெயர் காரணம்

தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது வழக்கம்.

அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் செல்வதையும், நடுவே நெல் மட்டும் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார்.

மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.

கோவிலின் சிறப்பு

தமிழகத்தில் மூன்று மூலவர்களைக் கொண்ட கோயில் நெல்லையப்பர் கோயில் மட்டுமே. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும். மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே நெல்லையப்பர் எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம்.

இங்குள்ள விநாயகர் முக்குறுணி விநாயகர், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.

இங்கு மார்கழி பூஜை கிடையாது. அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்கு கோயில் திறந்து, அனைத்து சுவாமிகளுக்கும் பூஜை நடக்கிறது. சிவனும், அம்பிகையும் ஒன்று என்பதன் அடிப்படையில் பிரதோஷத்தின்போது இங்கு அம்பாள் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோஷ பூஜை நடக்கிறது.

இதேபோல் சிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காந்தி சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204 வது தேவாரத்தலம் ஆகும்.

இந்தக் கோவிலின் நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தனி ராஜகோபுரம் இருக்கிறது. இரண்டு சன்னிதியை இணைக்கும் சங்கிலியாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு தனித்தனி கோவில் போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் இரண்டும் ஒரே கோவில் தான்.

பொதுவாக எல்லா கோவில்களிலும் நவகிரக சந்நிதியில் புதன் கிழக்கு நோக்கித்தான் காட்சி தருவார். இந்த கோவிலில் மட்டும் வடக்கு பக்கம் காட்சியளிக்கிறார். கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு பக்கம் நோக்கி இருப்பதால், மாணவர்கள் இந்த தளத்தில் புதனை வழிபட்டால், உயர்ந்த நிலைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம்.

மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம்.

மூலஸ்தானத்திற்கு அருகாமையில் கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் உள்ளது. தனி சன்னிதியில் திருமால் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். திருமால் சிவலிங்கத்தை பூஜை செய்வது போன்ற காட்சி இங்கு உள்ளது. அருகில் இருக்கும் உற்சவரான விஷ்ணு பகவானின் மார்பில் சிவலிங்கம் இருக்கின்றது. திருமாலை இந்த கோலத்தில் காண்பது மிகவும் அரிதானது. தன் தங்கையான அம்பாளை மணந்துகொண்ட சிவபெருமானுக்கு, தன் மார்பில் விஷ்ணு இடம் தந்திருப்பதாக கூறப்படுகிறது. தனது தங்கையை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்த பாத்திரம் இந்த இடத்தில் இருக்கிறது.

பெண்கள், திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டி தவமிருப்பாள்.

பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருளுவார். 11ம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைக்கவே, சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் புரிந்து கொள்வார். அப்போது பக்தர்கள், மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

12ம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News