திருப்பூர்; நல்லூர் ஈஸ்வரன் கோவிலில் பிப்ரவரி 1ல் கும்பாபிஷேகம்

திருப்பூரை அடுத்துள்ள நல்லூரில், விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சியம்மன் கோவிலில், வரும் பிப்ரவரி 1ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Update: 2023-01-24 11:17 GMT

திருப்பூரை அடுத்துள்ள நல்லூரில், விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, புதிய கொடிமரம் நடப்பட்டது.  

திருப்பூரை அடுத்துள்ள நல்லூர் பகுதியில், விஸ்வேஸ்வரசுவாமி விசாலாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று புதிய கொடிமரம் நடும் விழா நடைபெற்றது.

திருப்பூரில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்கள் காணப்படுகின்றன. திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், நகரில் மத்திய பகுதியில் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. அதுபோல், திருப்பூரை அடுத்துள்ள அவிநாசியில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில், எஸ். பெரியபாளையம் பகுதியில், சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுக்ரீஸ்வரர் கோவில், பழமைவாய்ந்த தன்மையுடன் இன்றும் பாதுகாத்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. அதுபோல், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நல்லூரில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரசுவாமி, விசாலாட்சியம்மன்  கோவில், பிரசித்தி பெற்றது. 

கும்பாபிேஷக. விழாவை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி அன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசன்ம் 4-ம் கால யாக பூஜை, திரவ்யாகுதி நிகழ்ச்சிகளும், காலை 4.45 மணிக்கு மகா பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகளும், 5 மணிக்கு உடன் கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் காலை 5.30 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வேஸ்வரசுவாமி கோவில் விமானம் மற்றும் ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 5.45 மணிக்கு மூலாலய மகா கும்பாபிேஷகமும் நடைபெற உள்ளது.

இதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மகாபிஷேகம், தீபாரதனை, திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா வருதல், பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது.

மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அன்று காலை முதல், பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 

கும்பாபிஷேக விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், திருப்பூர் மேயர் திேனஷ்குமார், சுப்பராயன் எம்.பி. உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த கோவிலில் கடந்த 11-ம் தேதி உரிய அனுமதியுடன் சேதமடைந்த பழைய கொடிமரம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக நேற்று மதியம் புதிதாக கொடிமரம் நடும் விழா நடைபெற்றது. இதில் துணை ஆணையர் (சரிபார்ப்பு) ரமேஷ், செயல் அலுவலர் சீனிவாசன், நகை மதிப்பீட்டு வல்லுனர் ஜீவானந்தம், இன்ஸ்பெக்டர் கணபதி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் நாச்சிமுத்து, பொறியாளர் சிவக்குமார், கோவில் பணியாளர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி கோவிலின் முன்பகுதியில் யாக சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தங்கமுலாம் பூசப்பட்ட கோபுர கலசங்களும் தயார்நிலையில் உள்ளன.

Similar News