தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்
X
தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர், காலைவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும், 30,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 20,000க்கும் அதிகமான கடைகள், கிராமப்புறங்களில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த ரேஷன் கடைகளில், 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின், பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அதன்படி, அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற குடிமை பொருட்களின் இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி பில் கண்டறியப்பட்டால், தொடர்புடைய பணியாளர்களிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகையை, இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். காலாவதியான பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் வசூல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், கடந்த காலத்தில் மாவட்ட தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்கள், 100 கி.மீ., தள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக விற்பனையாளர்களை தேர்வு செய்வதற்கு முன், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு பணியிட மாறுதல் செய்து, காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை இதுவரை அரசு நிறைவேற்றாததால், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 169 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில், 150 சங்கங்களை சேர்ந்த, 650க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதன் காரணமாக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story