மக்கள் பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் பேசக்கூடாது : துணை மேயர் எச்சரிக்கையால் பரபரப்பு

நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், துணை மேயர் பூபதி பேசினார். அருகில் மேயர் கலாநிதி, கமிஷனர் சிவகுமார் ஆகியோர்.
நாமக்கல்,
நாமக்கல் மாநகராட்சி மாமன்றக் கூட்டம், மேயர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூபதி மற்றும் கமிஷனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி பார்க் ரோட்டில், காலை மாலை வேளையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது அவற்றை அகற்ற வேண்டும். மாநகராட்சி ஆபீஸ் முன்பு வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் நிலவுகிறது. இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி 1வது வார்டு பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் ஏற்கனவே தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மாநகராட்சி 26 வது வார்டிற்கு உட்பட்ட ராமாபுரம் புதூரில், உப்பு தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினார்கள்.
கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு துணை மேயர் பூபதி மற்றும் கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் பதில் அளித்து பேசினர். தெருவிளக்கு மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக நகராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சத்தியவதி மற்றும் 26வது வார்டு கவுன்சிலர் சகுந்தலா பேசும்போது, குறுக்கிட்டு பேசிய மாநகராட்சி துணை மேயர் பூபதி, இது போன்ற பிரச்சினைகளை மன்றக் கூட்டத்தில் தெரிவிக்கக் கூடாது. அனைத்து நாட்களிலும் அலுவலகம் செயல்படுகிறது, அலுவலகத்தில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மக்கள் பிரச்சினைகளை மன்ற கூட்டத்தில் தெரிவிக்க கூடாது எனத் துணை மேயர் எச்சரிக்கை விடும் தொணியில் பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 150 தீர்மானங்களும் ஓருமானதாக நிறைவேற்றப்பட்டன. மேலும், தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேயர், துணை மேயர் உள்பட மாநகராட்சி கவுன்சிலர்கள் 39 பேரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu