2047ம் ஆண்டில் இந்தியா உலகின் நெ.1 நாடாக திகழும்: மத்திய இணை அமைச்சர் முருகன் பேச்சு

நாமக்கல்லில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றி விழா பேரணியில், மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணை தலைவர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாமக்கல்,
கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையிலும், பாகிஸ்தானிலும் செயல்பட்டு வந்த தீவிரவாதிகள் முகாம்களை ஏவுகனைகள் மூலம் தாக்கியது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என மத்திய அரசு பெயரிட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும், தேசியக்கொடி யாத்திரைகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையொட்டி நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜ சார்பில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு பாடுபட்ட ராணுவ வீரர்களுக்கும், பாரத பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நாமக்கல் நகரில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. நாமக்கல் நேதாஜி சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணிக்கு மாவட்ட பாஜ செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநில பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மேற்கு மாவட்ட பாஜ தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து பேரணி¬ துவக்கி வைத்தார். மெயின் ரோடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியாக நடைபெற்ற பேரணி பார்க் ரோட்டை அடைந்தது. அங்கு போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகன் பேசியதாவது:
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனைத் தொடர்ந்து, பாரத பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்திய ராணுவத்தினர் நேரில் செல்லாமல், நவீன ராணுவ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாதிகள முகாமை துல்லியமாக தாக்கி தீவிரவாதிகள் பலரை கொன்றது. குறிப்பாக இதில் பாகிஸ்தானை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கவில்லை. இதனால்தான் இந்தியாவின் இந்த தாக்குதலுக்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாம் ஏற்கனவே நடைபெற்ற புல்வாமா தாக்குதலின்போது ராணுவ வீரர்களை அனுப்பி வெற்றி கண்டோம். இப்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக பிரமோஸ் ஏவுகனை மூலம் இந்த தாக்குதலை நடத்தியதால், இந்திய ராணுவத்தின் திறனைப் பார்த்து சர்வதேச நாடுகள் அனைத்தும் அசந்துபோய் உள்ளன.
2014ம் ஆண்டிற்கு முன்பு நாம் வெளிநாட்டில் இருந்து ராணுவ தளவாடங்களை வாங்கினோம். தற்போது பல வெளிநாடுகள் இந்தியாவில் இருந்து ராணுவ தளாவடங்களை கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளனர். இதுவரை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். வருகிற 2047 சுதந்திர தின நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது இந்திய ராணுவம், அறிவியல் தொழில் நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உலக அளவில் நெ. 1 நாடாக திகழும். அதற்கான நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சிவசுந்தரம், தமாக மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, நகர தலைவர் சக்திவெங்கடேஷ், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி, தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்துகொண்டனர். பேரணியின் முன்புற பிரமோஷ் ஏவுகனையின் மாதிரி எடுத்துச் செல்லப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu