திருத்தணியில் தற்காலிக கொரோனா வார்டு - திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு!

திருத்தணியில் அமைக்கப்பட்ட 150 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் தற்காலிக கொரோனா சிறப்பு வார்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-20 14:43 GMT

தற்காலிக வார்டு அமைக்கும் பணியை திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்து வருகின்றது. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைகளில் ஆக்சிசன் படுக்கை கட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி இல்லாததால் சிகிச்சை கிடைக்காமல் பலர் இறக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 5000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர முடிவு செய்யப்பட்டது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை அருகில் 150 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தற்காலிக கொரோனா வார்டு அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகளை ஜி ஸ்கொயர் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் டெண்ட் அமைத்து ஆக்சிஜன் படுக்கை வசதிகள் செய்து தர அந்த அமைப்பு நிர்வாகி பாலா உறுதி கூறினார். இது தொடர்பான ஏற்கனவே அமைத்திருந்த கொரோனா வார்டுக்கான வீடியோவையும் காட்சிகளையும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டார்.

உடனடியாக இந்த பணிகள் தொடங்கி விரைவில் தற்காலிக மருத்துவமனையில் 150 படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் கழிப்பிட வசதியும் அதில் அமைத்து தரப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது இணை இயக்குனர் டாக்டர் ராணி, அரசு மருத்துவமனை அலுவலர்கள், டாக்டர் ராதிகா தேவி, மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News