திருத்தணி மருத்துவமனைக்கு 12 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கிய ரோட்டரி சங்கம்
திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கத்தின் மூலம் 12 ஆக்சிஜன் சிலிண்டர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வழங்கப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனை நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு 60 படுக்கைகள் உள்ளதால் நோயாளிகள் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் ஏற்படுத்தப்பட தீர்மானித்து அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
படுக்கைகள் அமைப்பதற்கான முதற்கட்டமாக பந்தல் அமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்தன. இப்பணிகளை திருத்தணி எம்எல்ஏ எஸ் சந்திரன் மற்றும் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ராதிகா தேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர், எம்எல்ஏ சந்திரன், ஒப்பந்ததாரரிடம் ஒரு வாரத்திற்குள் படுக்கைகள் அமைக்கும் பணிகள் முடிந்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று, எம்எல்ஏ சந்திரன் முன்னிலையில் திருத்தணி ரோட்டரி சங்கத்தினர் 12 ஆக்சிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.